பிரிட்டனின் லிவர்பூல் நகரில் மருத்துவமனைக்கு வெளியே வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
வெடிப்பு, பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தப்பட்டதால் பிரிட்டனில் அச்சுறுத்தல் விழிப்புநிலை உயர்த்தப்பட்டுள்ளது.
32 வயது சந்தேக நபர் இமட் அல் ஸ்வெல்மீன் லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்குப் போக டாக்சியை அழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
அங்கு சென்றதும் மருத்துவமனை வாசலில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்சி ஓட்டுநர் உயிர்தப்பினார். டாக்சி தீக்கிரையானது.
வெடிப்பு நேர்ந்தபோது ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் உள்ளூர்த் தலைவர்களும் லிவர்பூல் தேவாலயத்தில் நினைவு நாள் சடங்குக்காகக் கூடியிருந்தனர்.
சந்தேகநபர், உளவுத்துறை கண்காணிப்புப் பட்டியலில் இருந்தவரல்ல. அவரிடம் இதுவரை விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்பதை அது புலப்படுத்தியது.
அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியத்தைத் தாக்குதல் நினைவூட்டுவதாக பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறினார்.