இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இருவர் இன்று (12) இரவு அமெரிக்கா செல்கிறார்கள். அங்கு சில உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் ஈடுபட்ட பின்னர், நாடு திரும்புவார்கள்.
அமெரிக்கா செல்லும் குழுவினர், 20ஆம் திகதி அங்கிருந்து புறப்படுகிறார்கள். சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இலங்கை திரும்புகிறார்கள்.
சுமந்திரன் அங்கிருந்து பிரித்தானியா செல்கிறார். அங்கு சில தனிப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த சந்திப்பிற்கு சுமந்திரன் தனியாக செல்வதாகவே முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், சாணக்கியனை முன்னிலைப்படுத்தும் அவரது முயற்சிக்கு உதவும் என்பதால், சாணக்கியனையும் உதவியாக அழைத்துச் செல்கிறார்.
சாணக்கியனிற்கும் விசா வழங்குமாறு அவர் கோரியதையடுத்து, பிரித்தானிய தூதரகம் நேற்று அந்த விசாவை வழங்கியது. நேற்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன் பிரித்தானிய விசாவை பெற்றுக் கொண்டனர். இதன்போது பிரித்தானிய தூதருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து கனடா செல்லும் இருவரும், அங்கு தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினருடன் கலந்துரையாடல்களை நடத்தி விட்டு, 28ஆம் திகதி நாடு திரும்புவார்கள்.
இதேவேளை, சுமந்திரனின் அமெரிக்க பயணம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகை செய்திகள் வெளியான பின்னரே, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை அறிந்திருந்தனர். கட்சியின் முக்கிய எம்.பிக்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களும் பத்திரிகையை படித்தே தகவலை அறிந்து கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் கட்சியின் பல மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்த விவாதிக்க கட்சியின் மத்திய குழுவை கூட்டுமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி தலைவரை வலிறுத்தியுள்ளனர்.