போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்துக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொற்று உறுதியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் (9) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
33 வயது நாகேந்திரனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இப்போதைக்கு நிறுத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இடம்பெற்றது.
நீதிமன்ற அமர்வின்போது குற்றவாளிக் கூண்டுக்கு அழைத்து வரப்பட்ட நாகேந்திரன், சற்று நேரத்தில் அங்கிருந்து மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற அமர்வைத் தொடங்கிவைத்துப் பேசிய நீதிபதி ஆன்ட்ரூ பாங், “அவருக்கு (நாகேந்திரனுக்கு) கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எங்களுக்குத் தெரியவந்துள்ளது,” என்று கூறினார்.
பின்னர் குறிக்கப்படவுள்ள நாள் ஒன்றுக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விசாரணை நிறைவுறும்வரை நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
தமது இடது தொடையில் போதைப்பொருளை பொட்டலமாகக் கட்டி மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் பிடிபட்டார்.
நாகேந்திரனுக்கு 2010 நவம்பரில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அதிபருக்கு அவர் அனுப்பிய கருணை மனு 2020 ஜூனில் நிராகரிக்கப்பட்டது.
நாகேந்திரன் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.