எந்த பயங்கரவாதத்தோடும் அணுவளவும் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள். இந்த விடயத்தினை பல இடங்களிலும் தெளிவாக சொன்னோம். ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் நாங்கள் காட்டப்பட்ட பொழுது எங்களை பலரும் சந்தேக பார்வையோடு பார்த்தார்கள். எங்களுக்கு எதிராக பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள். கடந்த நல்லாட்சி காலத்தில் எங்களுக்கு எதிராக விசாரணை நடந்த பொழுது அமைச்சு பதவியிலிருந்து நாங்கள் விலகக்கோரி அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் மரணித்து விடுவார் என்று கூறி எங்களை பதவி விலகுமாறு பல அழுத்தங்கள் வந்தவுடன் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகி நியாயமான விசாரணைக்கு வழி கொடுத்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நீண்ட இடைவெளியின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிவரும் நிலையில் ஓட்டமாவடியில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது என்னை மூன்று முறை புலனாய்வு பிரிவினர் விசாரித்தார்கள். ஆனால் உண்மையான பதிலை வழங்கிய பொழுதும் சாதாரண நபருக்கு கூட நடக்கூடாத அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டவனாக எனது கதவு மூடிக் காணப்பட்ட நிலையில் மதிலால் பாய்ந்து உள்ளே வந்த அவர்கள் எனது மனைவி பிள்ளைகள் உறங்கிய அறைக்குள் பலவந்தமாக நுழைந்தார்கள். ஒரு பெரிய மாபியா தலைவரை கைது செய்வது போன்று என்னுடன் நடந்து கொண்டார்கள். அதன் பின்னர் ஆறு மாதம் சிறையில் இருந்தேன். கடந்த காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு கீழே கைது செய்த வரலாறு கிடையாது. பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம். இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீ.எஸ்.பி பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டேன்.
சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். எமது மக்களின் பாதுகாப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் எமது நாட்டில் எமக்கெதிராக இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் தியாகத்துடன் அரசியல் செய்கின்றோம் என்றார்.