ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் வேளையில், பிரான்ஸ் அரசாங்கம் நாடு முழுவதையும் உச்ச விழிப்புநிலையில் வைத்துள்ளது.
கோழிகளை உள்புற இடங்களில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வலைகளை நிறுவி, கோழிகளை வீடுகளிலேயே வளர்க்குமாறும், வெளிப்பறவைகளுடனான தொடர்பை தடுத்து நிறுத்தும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் எல்லைகளுக்கு அருகே nதாற்றுக்கள் அதிகரித்ததன் காரணமாக, வெள்ளிக்கிழமை பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் பறவைக் காய்ச்சலுக்கான ஆபத்து நிலை “உயர்வாக” உயர்த்தப்பட்டது.
ஓகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து ஐரோப்பாவில் உள்ள பண்ணைகளில் அல்லது காட்டு விலங்குகளிடம் 130 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் 3 சம்பவங்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டன.
டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் உள்ள பண்ணைகள் அனைத்தும் சமீபத்திய வாரங்களில் பறவைக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.
நெதர்லாந்தின் மத்திய மாகாணத்தில் 36,000 விலங்குகள் அழிக்கப்பட்ட நிலையில், நாட்டிலுள்ள பண்ணைகள் அனைத்து கோழிகளையும் அடைத்து வைத்திருக்க கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.
இத்தாலியில், ஒக்டோபர் 19 முதல் வெரோனா பகுதியில் உள்ள ரொவான்கோழி பண்ணைகளில் ஆறு தொற்று சம்பவங்கள் பதிவாகின. எனவே பிரான்சில் கோழிப்பண்ணைகளைப் பாதுகாக்கக் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ், பறவைகளை ஒன்றுகூட்டுவது மற்றும் பந்தய புறா போட்டிகள் மார்ச் வரை தடை செய்யப்பட்டுள்ளன. உயிரியல் பூங்காக்களில் உள்ள பறவைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது தடுப்பூசி போட வேண்டும்.
பிரான்ஸ் முன்பு செப்டம்பரில் ஆர்டென்னெஸ் பகுதியில் கடுமையான வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை அளவை “மிதமானதாக” உயர்த்தியது.
கடந்த குளிர்காலத்தில் தென்மேற்கில் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து, 3.5 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டன.