கீரிமலையில் கடற்படையின் பாவனைக்கு சுவீகரிப்பதற்காக பொதுமக்களின் காணிகளை அளவிடும் முயற்சி காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கீரிமலை ஜே/226 கிராமசேவகர் பிரிவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைக்கு செல்லும் வீதியில், கிருஷ்ணன் கோயிலடியை அண்மிதத பகுதிகளில் உள்ள காணிகளே சுவீகரிக்கபடவுள்ளன.
1990 ஆம் ஆண்டு முதல் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த காணிகளை உள்ளடக்கியதாக, கடற்படை முகாம் உள்ளது.
அதில் 3 தனியாருக்கு சொந்தமான, 2 ஏக்கர் காணிகள் இன்று அளவிடப்படவிருந்தன.
இதையடுத்து காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான எம்.கே.சிவாஜிலிங்கம், ச.சஜீவன். வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று, இராணுவ முகாமிற்குள் நிலஅளவைத் திணைக்களத்தினர் நுழையவிடாமல் தடுத்தனர்.
பிரதேச செயலாளரை அங்கு வருமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர். எனினும், அவர் வரவில்லை.
பிரதேச செயலாளர், இராணுவம் கலந்துரையாடி, நிலஅளவைத் திணைக்களத்தினரை வேறு பாதையினால் அழைத்து செல்ல ஏற்பாடு நடைபெறுகிறது என போராட்டக்காரர்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து, நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தை முன் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ செலுத்த முடியாதவாறு போராட்டக்காரர்கள் தடையேற்படுத்தினர்.
இதையடுத்து, தமது காணிகளை ஒப்படைக்க சமமதம் இல்லையென காணி உரிமையாளர்கள் கையொப்பமிட்ட கடிதங்களை பெற்றுக்கொண்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.