மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் கணினி உபகரணங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பல்கலைகழகம் தற்போது கொவிட் நிலையமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. இவ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களே இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை பல்கலைகழகத்திற்குள்ளிருந்து வந்த வாகனத்தை, கடமையில் இருந்த பொலிசார் சோதனையிட்டபோது மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டது. வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மடிக்கணினிகள் 03,மேசை விளக்குகள் 07,மற்றும் இலத்திரனிணியல் பொருட்க்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி பொலிஸ் நடவடிக்கையினை குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜ.பி.எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பொருட்கள் மற்றும் வாகனம் போன்றவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.