தமிழ் கட்சிகளை ஒரணியில் இணைக்கும் முயற்சியாக வரும் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வலிறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியாக கோரிக்கை விடும் முயற்சியாக, வரும் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடக்கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன கலந்து கொள்கின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும்அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழ் அரசு கட்சி, நேற்று தனது அரசியல்குழு கூட்டத்தை இணைய வழியாக நடத்தியது. இதில் 2ஆம் திகதி கூட்டத்தில் கலந்து கொள்வதா இல்லையா என்பது பற்றி ஆராயப்பட்டது.
2ஆம் திகதி கூட்டத்தில் பங்கேற்பதில்லையென்றும், இந்த கூட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய, வரும் 6ஆம் திகதி கட்சியின் மத்தியகுழுவை கூட்டி முடிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
சூம் கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டு கூட்டம் தடைப்பட்டது. பின்னர், வட்ஸ்அப் குரூப்பில் கலந்துரையாடப்பட்டது.
வரும் 6ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு கூட்டத்தை கூட்டி ஆராய முயற்சிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும்படி தமிழர் தரப்பில் போதுமானளவில் குரல் கொடுப்பதில்லையென தமிழ் அரசியல் கட்சிகளின் மந்தமான தனத்தை, அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தார். இதை தொடர்ந்து, இந்த புதிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலும், தமிழ் அரசு கட்சி கலந்து கொள்வதில்லையென முடிவு செய்துள்ளது.