இளமைக் காதல் மிக துடிப்பானது. காதலிற்காக எல்லா சாகசத்தையும் செய்யும் துணிச்சலையும் கொடுக்கும். இப்படியான சில சாகசங்கள் காதல்கள ஈடேற்றுகிறது. சில விபரீத முடிவுகளை கொடுக்கிறது. இரண்டாவது வகை சம்பவமே அண்மையில் கொலொன்ன கிராமத்தில் நடந்தது.
பேஸ்புக் மூலம் அறிமுகமான காதல் ஜோடி, சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்த துயரமான சம்பவம் அண்மையில் பதிவானது.
கடந்த 17 ஆம் திகதி கொலொன்ன, பிடவெலகமவில் இந்த சம்பவம் நடந்து.
கொலொன்ன, பிடவெலகம பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதுடைய ஹன்சிகா சந்தமாலி ராஜபக்ஷ மற்றும் டிக்வெல்ல பத்தனை வடுமதுவ பகுதியைச் சேர்ந்த மதகதீர கங்கணம்கே சுராஜ் பிரசன்ன ஆகிய இருவரும் கறுவாத் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை டிக்வெல்ல பகுதியை சேர்ந்த அந்த இளைஞர், ஒக்டோபர் 16 இரவு கொலொன்னவிலுள்ள தனது காதலியைப் பார்க்க வந்திருந்தார். குடும்ப உறுப்பினர்கள் உறங்கிய பிறகு சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காதலனை சந்தித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“எனக்கு 53 வயது. என் மனைவி ஹேமலதா. எமக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகன்கள் மற்றும் ஒரே மகள். மூத்த மகன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படிக்கிறார். இளைய மகன் ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கிறார். மகள் கொலொன்ன தேசிய பாடசாலையில் கற்கிறார்.
மகளை காணவில்லையென்றதும் எல்லா இடங்களிலும் தேடினோம் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் காலை சுமார் 7.30 மணியளவில் எங்கள் உறவினரான ரூபசேனவின் கறுவாத்தோட்ட மின்சார கம்பியில் சிக்கி மகள் விழுந்து கிடந்ததை அறிந்தேன். நான் சென்று பார்த்தபோது, அருகில் மற்றொரு இளைஞனின் சடலமும் காணப்பட்டது“ என்றார்.
தான் பார்த்திராத மகளின் காதலனின் உடலை கொலொன்னவில் அடக்கம் செய்ய விரும்புவதாக, அந்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்திருந்தார்.
ஹன்சிகாவின் சகோதரர் தினேஷ் பிரியங்கர (22) கூறியதாவது:
என் ஒரே தங்கை இறந்துவிட்டாள். நானும் என் சகோதரியும் சிறந்த நண்பர்கள் போல இருந்தோம்.டிஎன் சகோதரி மிகவும் வேடிக்கையானவள். அவளுக்கு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக எனக்குக் சொல்லவில்லை.
அக்டோபர் 14 அன்று எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் அவர் யார் என்று எனக்குத் தெரியாததால் நான் மீண்டும் பேசவில்லை. பின்னர்தான் தெரியும், உயிரிழந்த இளைஞன்தான் அந்த அழைப்பை ஏற்படுத்தியதை. இருவருக்குமான உறவைப் பற்றிச் சொல்ல அந்த இளைஞன் அழைப்பை எடுத்திருக்கலாம்.நாம் அன்று பேசியிருந்தால், இப்படி நடந்திருக்காமல் போயிருக்கலாம்.
தங்கை போனைப் பயன்படுத்தவில்லை. நண்பி ஒருவரின் போனில் இருந்து இந்த காதலில் சிக்கியுள்ளார். தங்கை வீட்டிற்கு வந்தவுடன் எனது தொலைபேசியைக் கேட்டு விளையாடுவார்.
ஆனால் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி பெட்டி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கையின் நண்பர் அந்த தொலைபேசியை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்குத் தெரியாது என்றார்.
கறுவாத் தோட்டத்தில் மின்சார வேலியமைத்தவர், உயிரிழந்த மாணவியின் குடும்ப உறவினர்தான்.
இந்த சட்டவிரோத மின்வேலி குறித்து பலர் ஏற்கனவே பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் அண்மையில் இரண்டு தடவைகள் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று அவர் பொலிசில் உறுதியளித்திருந்தார்.
எனினும், மீண்டும் அவர் அமைத்த சட்டவிரோத மின் வேலி 2 உயிர்களை பலி கொண்டுள்ளது.
சந்தேக நபர் கடந்த 17ஆம் திகதி காலை பொலிஸில் சரணடைந்தார். 18 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி அவர் பதினான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.