அந்நியன் இந்தி ரீமேக் சர்ச்சை ஆகியிருப்பதால், புதிய கதையொன்றில் ரன்வீர் சிங்கை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.
2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்நியன். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டார்.
பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள அந்நியன் இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு தற்போது ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கும் எனக் கூறப்பட்டது. இதனிடையே, இந்தி ரீமேக் அறிவித்தவுடன் அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் – ஷங்கர் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.
இருவருமே கதை உரிமை தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை. தற்போது அந்நியன் ரீமேக் அல்லாமல் புதிய கதையொன்றில் ஷங்கர் – ரன்வீர் சிங் இணையவுள்ளனர்.
சமீபத்தில் புதிய கதையை ரன்வீர் சிங்கிடம் தெரிவித்துள்ளார் ஷங்கர். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால், அதில் இருவரும் இணைய முடிவு செய்துள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரன்வீர் சிங்கிற்கு நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.