மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலில் இந்த போராட்டம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை தீர்க்கப்படவுள்ள விவகாரத்திற்கு, இன்று ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதன் பின்னணியில், அரசியல் நோக்கமுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரிய கல்லாறு விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு பிரதேச சபையினால் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அங்கு கிரிக்கெட் விளையாடுவதால் பந்து பட்டு தமது வீட்டு ஓடுகள் சேதமாகுவதாக அயலிலுள்ள மக்களும், ஆலய நிர்வாகமும் பிரதேசசபையில் முறையிட்டிருந்தனர். பாதுகாப்பற்ற முறையில் விளையாடுவதால் தமது பிள்ளைகளிற்கும் பாதிப்பு என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதையடுத்து, மாற்று தீர்வொன்றை எட்டும் வரை தற்காலிகமாக அங்கு கடினப்பந்து விளையாட வேண்டாமென பிரதேசசபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சபை ரெலோவினால் நிர்வகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, விளையாட்டு கழக இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தை தொடர்பு கொண்ட போது, பாராளுமன்ற அமர்வுகள் முடிந்ததும் வெள்ளி (நெற்று) இரவு மட்டக்களப்பு வந்து விடுவேன், அதன்பின் வார இறுதியில் பேசி சுமுகமான தீர்வை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்குள் இன்னொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பின்னணியில், இளைஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சொல்லி வைத்தாற் போல சம்பவ இடத்திற்கு வந்திறங்கிய சாணக்கிய ராகுல இராஜபுத்திரன், “இது ரெலோவின் ஆளுகையிலுள்ள பிரதேசசபை. தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் 2 பேர்தான் உள்ளனர். எம்மால் ஒன்றும் செய்ய முடியாது“ என பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் தரப்பு கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தம் விதமாக செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் அண்மைக்காலமாக வலுத்து வரும் நிலையில், இந்த சம்பவமும் நடந்துள்ளது.
இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டாலும், நாளை இந்த விவகாரம் திட்டமிட்டபடி, சுமுகமாக தீர்த்து வைக்கப்படும் என பிரதேசசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை தீர்க்கப்படவுள்ள விவகாரத்திற்கு, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.