பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கு அவமானப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில், “ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.
பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது, “பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும், நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன். இது அவமானத்துக்கான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.