மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பூலாக்காடு, பொண்டுகள்சேனை கிராமங்களில் மண் அகழ்விற்கான புதிய இடங்களை அடையாளப்படுத்துவதற்காக இடங்களை பார்வையிடுவதற்காக இன்று செவ்வாய் கிழமை (5) கள ஆய்விற்கு வருகை தந்த அரச அதிகாரிகள் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமது பகுதியில் மண் அகழ்விற்கு இடமளிக்கமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய் கிழமை காலை வாகனேரி வகிளாவெளிச் சந்தியில் கூடிய விவசாயிகள் வாகனங்களில் வந்த அதிகாரிகளை குறித்த கிராமங்களுக்குள் உட்செல்ல விடாமல் வழி மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து குறித்த இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினார்கள். மண் அகழ்விற்கான அனுமதி பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தொடர்பாக பரிசீலனை செய்து பொருத்தமான இடங்களை பார்வையிட வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
இதன்போது வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தின் விவசாயம் செய்யும் பட்டியடி வெளி, வாகுளாவெளி, ஆணமடங்கி, தவணை, பிரம்படித் தீவு, நுறு ஏக்கர், பள்ளிமடு போன்ற வயல் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிலவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேற்படி கண்டங்களைச் சேர்ந்த பதினையாயிரம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் மண் அகழ்வினால் பாதிக்கபடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
சம்பவங்களை நேரில் சென்று பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த மண் அகழ்விற்காக அடையாளப்படுத்திய இடங்கள் நீர்பாசன திட்டத்திற்குள் வருவதனால் பொருத்தமற்ற இடமாக காணப்படுவதனால் நீர்பாசன அதிகாரிகள் அறிக்கைகளை தங்கள் அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பார்கள் என பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு கருத்து தெரிவித்தார்.
மேற் குறித்த பிரதேசத்தில் 2 பேர் புதிதாக விண்ணப்பம் செய்துள்ளனர். கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு, மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளப்பளர் எஸ். நாகரெத்தினம், மட்டக்களப்பு புவிசரிதவியல் திணைக்கள உத்தியோகஸ்த்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.