யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக நாளை 7 ஆம் திகதி நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் படி, நிகழ்நிலையில் நாளை காலை 9 மணி முதல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இரண்டு அமர்வுகளாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின் யுரியூப் மற்றும் முகப்புத்தக பக்கம் ஆகியவற்றினூடாக நேரலை மூலம் https://www.facebook.com/university.jaffna
https://www.youtube.com/channel/UCMNzGVtXq9_Y4oYOYEkd-7Q ஆகிய இணைப்புகளின் மூலம் பார்வையிடமுடியும் எனவும், பட்டம் பெறுபவர்களுக்கு நேரலைக்கான இணைப்புக்கள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரம், நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.