வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், புதிய நகரசபை தலைவருன்கும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது, ஏற்கனவே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர், தனக்கு தவிசாளர் பதவி தர வேண்டுமென அடம்பிடித்து, அது கிடைக்காத பட்சத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்தார்.
அவர் பதவியாசையில் கட்சிதாவியதாக குறிப்பிடப்பட்டது.
அதேவேளை, அவரை சமரப்படுத்த, தவிசாளர் தேர்விலன்று காலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அவரை சந்தித்து பேசிய போது, “நான் கட்சி மாறி வாக்களித்தாலும், உங்களால் என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது. சுமந்திரன் அதற்கான உத்தரவாதத்தை சந்துள்ளார்“ என அவர் சவால் விட்டதாக, சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், வாக்களிப்பதற்காக நகரசபைக்கு, அங்கஜன் இராமநாதன் தரப்பின் வாகனத்திலேயே செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார் என சிவாஜிலிங்கம குறிப்பிட்டிருந்தார்.
வாக்கெடுப்பில் போது, உப தவிசாளர் பல்டியடித்தமையினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு, வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது.
தனக்கு தவிசாளர் பதவி கிடைக்கவில்லையென்ற ஒரே காரணத்தினாலேயே இவர் எதிராக வாக்களித்தார். கட்சி, இனநலனை சார்ந்து முடிவெடுக்காமல், பதவியாசையினடிப்படையில் அவர் முடிவெடுத்தமையால், அவரை கட்சியை விட்டு நீக்க ரெலோ நடவடிக்கையெடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்டு வெற்றியீட்டிய தலைவரை, எம்.ஏ.சுமந்திரன் குழுவினர் சந்தித்தனர். இதன்போலு கூட்டமைப்பிலிருந்து பல்டியடித்த உப தவிசாளரும் உடனிருந்தார்.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவை ரெலோ மேற்கொண்டிருந்தது.
கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் உள்ளூராட்சிசபையை குழப்பும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் நடந்து கொண்டிருப்பது, வலுவான சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ரெலோவுடனோ அல்லது ரெலோவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளருடனோ உள்ள தனிப்பட்ட கோபத்தின் அடிப்படையில், கட்சி நலனை சிந்திக்காமல் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இதேவேளை, கடந்த சில ஆண்டுகளில், கட்சி- இன நலனை மீறி, தனிப்பட்ட நோக்கங்களிற்காக கூட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார் என்ற வலுவான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
கடந்த வடமாகாணசபையில் குழப்பத்திற்கு முக்கிய- பின்னணி- காரணகர்த்தாக்களில் ஒருவராக அவர் இருந்ததாக வலுவான குற்றச்சாட்டு உள்ளது. அவரது அணியை சேர்ந்தவர்கள் மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதும், கனடாவிலுள்ள வயோதிபர்களின் பின்னணியில் அப்போதைய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து, குழப்பத்தை ஏற்படுத்தியதம் இரகசியமான விடயங்கள் அல்ல.
யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் பல்டியடித்தார். கூட்டமைப்பு ஆட்சியை இழந்தது. அதன் பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டதாக, அப்போது இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்தே குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
அதை உறுதி செய்வதை போல, வாக்கெடுப்பு முடிந்த அன்றிரவு, பல்டியடித்த உறுப்பினரின் வீட்டிற்கே சென்ற சுமந்திரன், வெகுநேரம் பொழுதை கழித்தார்.
தற்போது, வல்வெட்டித்துறை நகரசபையிலும் அதே கதை.
எப்படியோ ஒரு கருப்பு ஆட்டை அடையாளம் கண்டு, இந்த குழப்பங்கள் நிகழ்ந்து விடுகிறது.
எம்.ஏ.சுமந்திரனின் ஒவ்வொரு நகர்வும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும், கூட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இவற்றின் பின்னணி குறித்த வலுவான சந்தேகங்கள் எழுவது இயற்கையே. எம்.ஏ.சுமந்திரன் ஏதோவொரு தரப்பின் சிலிப்பர் செல்லாக செயற்படுகிறாரா அல்லது அவரது இயல்பே அதுதானா என்பதை காலம்தான் கண்டறியும்.