கோவிட் -19 தொற்று காலத்தில் அல்லது கோவிட் -19 க்குப் பிந்தைய தனிமைப்படுத்தலின் போது சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பக்டீரியா தொற்றுக்கள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் வைத்தியர் ஜனக அகரவித, கோவிட் -19 காரணமாக தோல் நோய்கள் உருவாகும் போக்கு இருப்பதாகக் கூறினார்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட நபர்கள் தினமும் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் 14 நாட்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுக்கதை மக்களிடையே உள்ளது என்றார்.
தினமும் குளிப்பதன் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ உடலை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சொறி, அரிப்பு, சின்னம்மை போன்றவை உருவாகும் ஒரு நிலை உருவாகலாம் என்று அவர் கூறினார்.
ஏராளமான மக்கள் இப்போது வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து குளிக்க வேண்டியது அவசியம். வியர்வை மற்றும் பிற நிலைமைகள் காரணமாக, பக்டீரியா மற்றும் கிருமிகள் உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
எனவே கோவிட் -19 இலிருந்து குணமடையும் போது தோலையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் என்றார்.
கோவிட் மீட்புக்குப் பிந்தைய ஒன்று முதல் இரண்டு மாதங்களில் பலர் தோல் நோய்கள் மற்றும் முடி உதிர்தல் போன்ற சில சிக்கல்களை அனுபவிப்பார்கள்.
இருப்பினும், அவர்கள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்று அவர் கூறினார்.
தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்று இல்லாத நபர்களிடையே ஆவி பிடித்தல் ஒரு பொதுவான நடைமுறையாகும். அதிக வெப்பத்தை உள்ளிழுக்கும் போது தேவையற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் சிக்கல்கள் உருவாகுமென்பதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எனவே தேவையற்ற உடல்நல சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் சுகாதார நிபுணர்களால் வழங்கப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம் என்று கூறினார்.