உலகில் வாழ்ந்து கொண்டிருப்போரில் ஆக வயதான இரட்டையர் என ஜப்பானியச் சகோதரிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர்.
ஒரே மாதிரி தோற்றமுடைய அவர்களின் வயது 107 ஆண்டு, 300 நாட்கள்.
உமேனோ சுமியாமாவும் (Umeno Sumiyama) கவுமே கொடமாவும் (Koume Kodama) 1913ஆம் ஆண்டு ககாவா மாகாணத்தில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர். 13 பேரை கொண்ட குடும்பத்தில் அவர்கள் பிறந்தனர்.
தற்போது, அவர்கள் ஜப்பானின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் சிறு வயதிலேயே பிரிந்து விட்டனர். தொடக்கப் பள்ளி முடித்த பிறகு கவுமே தனது மாமாவுக்கு உதவுவதற்காக ஷோண்டோ தீவை விட்டு வெளியேறினார். அவர்கள் வயதாகும் வரை பிரிந்து இருந்தனர்.
உமேனோ அவர்களின் சொந்த தீவைச் சேர்ந்த ஒருவரை மணந்தார், கவுமே ஓய்டாவில் ஒருவரை மணந்தார்.
இரட்டையர்கள் 300 கிமீ இடைவெளியில் இருந்ததால், அவர்களால் தொடர்ந்து சந்திக்க முடியவில்லை, முக்கியமாக திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருப்பினும், அவர்கள் 70 வயதை அடைந்தவுடன், அவர்கள் பல சமயங்களில் பௌத்த யாத்திரைக்காக ஒன்றாக பயணம் செய்தனர்.
கொரோனா நிலவரத்தால், முன்னெச்சரிக்கையாக அவர்களின் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும்.
ஜப்பானின் மறைந்த இரட்டை சகோதரிகளின் சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.
மறைந்த இரட்டையர்கள், 107 ஆண்டுகள், 175 நாள்கள் உயிர்வாழ்ந்தனர்.
உலகிலேயே ஆக அதிகமான ஆயுட்காலம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள்.
வாழ்ந்து கொண்டிருப்போரில் உலகின் ஆக வயதானவரும் ஜப்பானைச் சேர்ந்த கேன் தனாக்கா (Kane Tanaka) என்ற மூதாட்டியாவார். அவருக்கு வயது 118.