சேலம் மாவட்டம், கூழையூரில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் (19) என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமார். இவரின் மனைவி சிவஜோதி. இவர்களின் முதல் மகன் நிஷாந்த் பொறியியல் படித்து வருகிறார்.
இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கெனவே 2019இல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.
2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனுஷ் நீட் தேர்வை எழுதுவதாக இருந்தது. எனினும் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்த தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
மாணவர் தனுஷ் தற்கொலை தொடர்பாக கருமலைக்கூடல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.