ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் நாட்டு மக்கள் யாரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய அனுமதிக்க முடியாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
எந்தப் பெயரிலும், எந்த நோக்கத்துக்காகவும் எந்தக் குழுவும், எவரும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று தலிபான்களால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறுகிறது.
காபூல் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் கடந்த ஐந்து நாட்களாக நடந்த சில போராட்டங்கள் வன்முறையாக மாறிய பின்னர் தலிபான்கள் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையின்படி, சிலர் காபூல் மற்றும் மாகாணங்களில் வீதிகளில் இறங்குகிறார்கள், அவர்கள் சில கட்சிகளால் தூண்டப்பட்டு, வாழ்க்கை ஒழுங்கை சீர்குலைத்து, குடிமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தியுள்ளனர்.
“போராட்டக்காரர்கள் நீதி அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். போராட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் எதிர்ப்புக் கோஷங்கள், நேரம் மற்றும் ஆரம்பிக்கும் இடம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் முடிவிடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்“ என அறிவித்துள்ளனர்.
பெண்கள் அமைச்சரவையில் பங்கேற்பதற்காகவும், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் குறுக்கீடுகளிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.