தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை தீர்க்கத் தவறிய அரசாங்கம் அதிபர்களையும் ஆசிரியர்களையும் மிரட்டத் தொடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரால் உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் சங்க செயலாளர் மஹிந்த ஜயசின்ஹ இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்று கடிதம் எச்சரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பல கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்க தவறிவிட்டது. கல்வி அமைச்சர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் மிரட்டினாலும் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தயாராக இல்லை என்று மஹிந்த ஜெயசின்ஹ தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாடசாலைகள் இன்னும் மூடப்பட்டிருக்கும் சூழலில், வேலைநிறுத்தத்தை நிறுத்த அமைச்சர் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் கண்டிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.