பிரான்சில், 2017ஆம் ஆண்டில் இறந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பெண், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜீன் பொச்சேன் எனும் அந்த 59 வயது பெண், இத்தனை நாளாக இறந்தவராக வாழ்ந்து வருவதில் உள்ள சட்டச்சிக்கல்களை கண்ணீருடன் விபரித்துள்ளார்.
ஓகஸ்ட் 30, 2021 இல், அவரது குடும்பத்துக்குக் கடிதம் ஒன்றை நீதிமன்றம் அனுப்பியிருந்தது. அதில், ஜீன் இறந்துவிட்டதால், அவர் தனது ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை அவரது மகனும் கணவரும் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.
அந்தக் கடிதம், ஜீனின் சுத்திகரிப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரால் தொடுக்கப்பட்ட சட்டவழக்குத் தொடர்பானது.
இறந்தவர் எனச் சட்டபூர்வமாக முடிவு செய்யப்பட்டதால், ஜீனுக்கு அடையாளம் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் காரணத்தால் அவரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை, வேலையும் பார்க்க முடியவில்லை.
ஜீன் கடன்பட்டதாகக் கூறப்படும் தொகையை மீட்க, நீதிமன்றம் அவரது குடும்பத்தின் சில உடைமைகளை முடக்கியது.
அவரது பரிதாப நிலையிலும், ஜீன், தான் உயிரோடு இருப்பதை நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக நிரூபிக்கத் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என நம்பப்படுகிறது.
தற்போது அவரால் முறையான மருத்துவ சிகிச்சையும் பெற முடியவில்லை. 2 பற்கள்தான் அவருக்கு உள்ளது. அதனால் அப்பிளை கூட கடிக்க முடியவில்லை, உயிருடன் இருப்பதை நிரூபித்து விட்டு, முதல் வேலையாக பல் கட்ட வேண்டும் என்கிறார்.
கணவனுடன் மீண்டும் சொந்த வீட்டில் வாழ்க்கையை அனுபவிப்பது தனது மற்றைய கனவு என்கிறார்.