வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவில் அஜித் ஜாலியாக பைக் ஓட்டி வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கின. திட்டமிட்டதை விட தாமதமாக படப்பிடிப்பு நடைபெற்றது. எதிர்பாராத கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றதால், படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனால், வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டுமென டிவிட்டரில் குரல் கொடுத்த அஜித் ரசிகர்கள், கோயிலில் பூஜை செய்வது, அரசியல்வாதிகளிடம் அப்டேட் கேட்பது என அலப்பறையைக் கூட்ட இங்கிலாந்து கிரிக்கெட் மைதானம் வரை வலிமை அப்டேட் என்ற வார்த்தை வைரலாக பரவியது.
அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை உணர்ந்த படக்குழுவினர் வலிமை திரைப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு சமாளித்தனர். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பணிகளும் நிறைவடைந்து, ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் மீதம் இருந்த நிலையில் ஸ்பெயினில் படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஸ்பெயினில் அனுமதி கிடைக்காததால், ரஷ்யாவில் இந்த காட்சிகளை படமாக்க இயக்குநர் முடிவு செய்தார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி ரஷ்யா சென்ற படக்குழுவினர், மாஸ்கோவில் சுமார் 10 நாட்கள் சண்டைக் காட்சியை படம்பிடித்துள்ளனர். இதையடுத்து, படக்குழுவினர் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். வலிமை படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடைந்து உள்ளதை அடுத்து படத்திலிருந்து இரண்டாவது பாடலும் படத்தின் ரிலீஸ் தேதியும் வெகு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள பல இடங்களில் நடிகர் அஜித், தனக்கு பிரியமான பைக்கில் உல்லாசமாக சுற்றி வருகிறார். ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளதால், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.