சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனியைப் பெறுவதற்காக சென்ற வவுனியா மக்கள் அங்கு சீனி இன்மையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சிவப்பு சீனியை இன்று (01) முதல் நடாளாவிய ரீதியில் 130 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்திலும் சீனிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சீனி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கோவிட் பரவலின் தீவிர தன்மை மற்றும் ஊரடங்கு சட்டம் என்பவற்றுக்கு மத்தியில் சிவப்பு சீனியை 130 ரூபாய் விலையில் பெற்றுக் கொள்வதற்காக வவுனியாவின் பல்வேறு கிராமங்களிலும் இருந்து சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மக்கள் வந்திருந்தனர்.
எனினும் குறித்த அரச விற்பனை நிலையங்களில் சீனி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.