கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் 3ஆவது நாளாக இன்று (1) முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நுளம்பு கள தடுப்பு பிரிவினர், நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர்,பாதுகாப்பு படையினர் இணைந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது கட்டிடங்கள், பாடசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.இரண்டாவது தடுப்பூசியை பெற 30 வயதிற்கு மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுவருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, ஆகிய சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இந்த இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 3ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-பா.டிலான்-