மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
வாகரை களப்புப் பகுதியை கடற்பகுதியோடு இணைக்கும் பகுதியில் மணல் நிரம்பி மூடியுள்ளதுடன் நீண்டகாலமாக களப்பு பிரதேசம் ஆழப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.
குறித்த களப்பினை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், மணல் மேட்டினையும் அகற்றித் தருமாறு பிரதேச கடற்றொழிலாளர் அமைப்புக்கள் தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் இன்று(30.08.2021) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மேற்படிக் கூட்டம் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், வாகரை பிரதேச கடற்றொழில்சார் அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும், சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அத்துடன், குறுகிய காலவரையறைக்குள் தேவையான அனுமதிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு, அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நந்திக்கடல் களப்பு மற்றும் அருகம்பை களப்பு தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது
கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயகம், நாரா நிறுவனத்தின் ஆய்வு அதிகாரி கலாநிதி அருளானந்தம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கஹொவத்த, களப்பு அபிவிருத்திப் பணிப்பாளர் அணுர உட்பட துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-ஈ.பி.டி.பி ஊடகப்பிரிவு-