கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் தங்களுடைய வயல் காணிகளையும் இழந்து வருவதாக ஏழை விவசாயிகள்
கவலை தெரிவித்துள்ளனர்.
மழையை நம்பி ஒரு போகம் விதைப்பில் ஈடுப்படுகின்ற விவசாயிகளின் வயல் நிலங்களில் சட்டவிரோதமான பாரியளவிலான குழிகள் வெட்டப்பட்டு மணல்
அகழ்வுகள் இடம்பெறுகின்றமையால் குறித்த காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவ் விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கரைச்சியில் ஊற்றுப்புலம், சிவநகர், பன்னங்கண்டி, உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, கண்டாவளையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம்,
கல்லாறு, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்களை விவசாயிகள் இழக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலீஸ், இராணுவம், மற்றும் அதிகாரிகளின் கவனங்களுக்கு பல தடவைகள் கொண்டு
சென்ற போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத்
தெரிவிக்கும் விவசாயிகள். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களை
தங்களால் தடுக்க முடியாதுள்ளதாகவும் மீறி தடுத்தால் அல்லது தட்டிக் கேட்டால் வாள் வெட்டுக்கு இலக்காக நேரிடுகிறது என்றும் கூறுகின்றனர்
எனவே மாவட்டத்தின் எதிர்காலம் கருதி பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.