இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
களத்தின் தன்மையைச் சரியாகக் கணிக்க முடியாத துடுப்பாட்டம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு என இரண்டுமே இந்திய அணியின் இந்த மோசமான முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சிக்குக் காரணம்.
முன்னதாக நாளின் ஆரம்பத்தில் ரொஸ் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது இந்தியா. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல். வரப்போகும் இந்திய அணியின் சொதப்பல் துடுப்பாட்டத்திற்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் புஜாரா, கோலி என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஹானே – ரோஹித் சர்மா இணை சற்று நம்பிக்கை அளித்தது. 90 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே இவர்கள் சேர்த்தாலும் மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி பார்த்துக் கொண்டனர்.
சரியாக உணவு இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பு ரொபின்ஸன் வீசிய பந்தில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் உணவு இடைவேளைக்குச் சென்றது.
இதன் பிறகு தொடர்ந்த ஆட்டத்திலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ரஹானேவுக்குப் பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் 9 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்திருந்தபோது ரொபின்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். துடுப்பாட்டத்தில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையான ரவீந்திர ஜடேஜா ஆடவந்தார்.
இவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து நிலைமையைச் சீராக்கப் பாடுபட்டனர். பவுண்டரி அடிக்க முடியாமல் மெதுவாக, ஒவ்வொரு ரன்னாக இந்தியாவின் ஸ்கோர் கூடியது. கிட்டத்தட்ட 8 ஓவர்கள் இந்த இணை தாக்குப்பிடித்தது. ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே ஷமியும் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்த ஓவரை சாம் கரன் வீசவந்தார். இரண்டாவது பந்தில் ஜடேஜா (4) அடுத்த பந்தில் பும்ரா (0) என இவரும் அடுத்தடுத்து வீழ, வெறும் 67 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அதாவது வெறும் 11 பந்துகளில் இந்த 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
இதன் பிறகு இஷாந்த் சர்மாவும் முகமது சிராஜும் சற்று நேரம் சமாளித்து ஆட ஸ்கோரும் முந்தைய ஓவர்களை விட சற்று வேகமாகவே கூடியது. அடுத்த சில ஓவர்களில் முகமது சிராஜ் 3 ரன்களுக்கு ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்திய அணி 78 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஒல்லீ ரொபின்ஸன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். விக்கெட்டுகள் எடுத்த அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் இன்னும் 40 ஓவர்களுக்கு மேல் மீதமிருப்பதால் இந்தியாவின் இந்த ஸ்கோரை இங்கிலாந்து அணி இன்றே முந்திவிடும். இங்கிலாந்து 200 ரன்களிற்கு மேல் எடுத்தால் இந்தியாவின் கதி நிச்சயம் தோல்விதான்.