ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் காபூலில் இருந்து அமெரிக்க விமானப் படையை வெளியேற்றும் விமானத்தில், நடு வானிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அமெரிக்க எயார் மொபிலிட்டி கொமாண்ட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த வெளிநாட்டு படைகள் வெளியேறி வரும் வரும் நிலையில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
இதனை சமாளிக்க முடியாமல், அமெரிக்காவும் பிற நாடுகளும் திணறி வருகின்றன.
இதேவேளை, ஆப்கானில் தம்முடன் இணைந்து பணியாற்றிய அந்த நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவினால் வெளியேற்றும் பட்டியலில் இருந்த நிறைமாத கர்ப்பிணியொருவர், காபூலில் இருந்து நேற்று புறப்பட்ட அமெரிக்காவின் சி-17 விமானத்தில் சென்றுள்ளார்.
நடுவானிலேயே அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த விமானி காற்றழுத்தத்தை சீராக்க விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து அப்பெண்ணின் உயிரை காப்பாற்றினார். உடனடியாக விமானம் ஜெர்மனியின் ராம்ஸ்டீன் விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரை இறங்கிய சில நிமிடங்களில் அந்தப் பெண் குழந்தையை பிரசவித்தார். விமானத்தின் சரக்கு பகுதியில் பிரசவம் இடம்பெற்றது. தளத்திலிருந்து விமானப் பணியாளர்கள் விமானத்தில் ஏறி பிரசவத்தை முடிக்க உதவினார்கள்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மையம் ஒன்றுக்கு தாயும், பெண் சிசுவும் கொண்டு செல்லப்பட்டனர்.
மேஜர் ஜெனரல் வில்லியம் டெய்லர் பென்டகனில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை காபூலில் இருந்து 2,500 அமெரிக்கர்கள் உட்பட 17,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.