யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பலகையினை நிறுவும் ஒப்பந்தம் தென்னிலங்கை நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததால் யாழ் மாநகரசபையில் இன்று பெரும் குழப்பம் நிலவியது.
இன்றைய அமர்வு முழுவதும் இந்த விவகாரமே காரசாரமாக விவாதிக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வரிற்கு தக்க சமயத்தில் ஆபத்பாந்தவர்களாக கைகொடுக்கும் ஈ.பி.டி.பியும் இன்று கைகழுவி விட, முதல்வர் மணிவண்ணன் அணி இன்று நெருக்கடியை சந்தித்தது.
ஈ.பி.டி.பி இல்லாத நிலைமையை பயன்படுத்த விரும்பிய கூட்டமைப்பு, இந்த விவகாரத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கடுமையான வலியுறுத்தியது. எனினும், சிக்கலை உணர்ந்த முதல்வர் மணிவண்ணன் வாக்கெடுப்பை அனுமதிக்கவில்லை. மாறாக, சர்வகட்சி குழுவொன்றை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டத்திற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
வீதிப்பெயர்களுடன், தமது விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 10 இடங்களில் வீதிக்கு மேலாக விளம்பர பலகையிட தென்னிலங்கை நிறுவனமொன்றிற்கு யாழ் மாநகர முதல்வரால் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இது முறையற்ற அனுமதி, தன்னிச்சையாக முதல்வரால் வழங்கப்பட்டது, இதன் பின்னணியில் “ஏதோ“ இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும், முதல்வர் தரப்பு அதை மறுத்தது. வீதிகளிற்கு பெயரிட மாநகரசபையினால் வழங்கப்பட்ட அனுமதிக்கிணங்கவே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தை விவாதிக்க சிறப்பு அமர்வை கூட்டும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர். 4 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரினால் சிறப்பு அமர்வை கூட்ட விதிகள் அனுமதித்திருந்த போதும், முதலாவது தடவையில் 8 உறுப்பினர்களும், இரண்டாவது தடவையில் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தும் சிறப்பு அமர்வை கூட்ட முதல்வர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் இன்று மாதாந்த அமர்வு இடம்பெற்றது.
இன்றைய அமர்வில் விளம்பர பலகை விவகாரம் விவாதிக்கப்படவிருந்ததால், அமர்வில் கலந்து கொள்ள ஈ.பி.டி.பி விரும்பியிருக்கவில்லை. அதனால் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, அமர்வில் கலந்து கொள்ளாமல் சென்று விட்டனர்.
இதனால், இன்று சபையில் எதிர்க்கட்சி பலமாக இருந்தது.
விளம்பர பலகை விவகாரம் காலை 9 மணி தொடக்கம் மதிய போசன இடைவேளை வரை சூடாக விவாதிக்கப்பட்டது. விளம்பர பலகை விவகாரத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறு எதிர்க்கட்சிகள் கோரின. பெரும்பான்மை இல்லாததை உணர்ந்து, அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இறுதியில்,5 உறுப்பினர்களை கொண்ட அனைத்துக் கட்சிகுழு அமைக்கப்பட்டது. துறைசார்ந்தவர்களுடன் பேசி, அந்த குழு அறிக்கை சமர்ப்பிப்பதென்றும், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மதிய போசன இடைவேளையின் பின் அமர்வு கூடியபோது, சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இருக்கவில்லை. (15 உறுப்பினர்கள் இருந்தாலே சபையை நடத்த முடியும்). 13 உறுப்பினர்களே சமூகமளித்திருந்ததால், நிகழ்ச்சி நிரலின் எஞ்சிய பகுதிகளை விவாதிக்க, நாளை மதியம் மீண்டும் மாநகரசபை கூடும்.