ஆப்கானிஸ்தானின் பெண்கள் காற்பந்துக் குழுவின் வீராங்கனைகள் தங்கள் காற்பந்து சீருடைகளை எரித்து, சமூக ஊடகக் கணக்குகளை அழித்துவிடுமாறு வலியுறுத்தியுள்ளார், அந்த நாட்டு அணியின் முன்னாள் தலைவர் கலிடா போபல்.
நாடு மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், விளையாட்டாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டுத் தாம் அவ்வாறு கேட்டுக்கொள்வதாக, டென்மார்க்கில் உள்ள கலிடா கூறினார்.
அவ்வாறு செய்யச் சொல்வது வருத்தமளித்தாலும், எதிர்காலத்தை எண்ணி விளையாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் அஞ்சுவதாக அவர் சொன்னார்.
அவர்கள் பாதுகாப்பு நாடவோ உதவி கேட்பதற்கோ தற்போது வழியில்லை என்றார் போபல்.
1996க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில், தலிபான் ஆட்சியில் இருந்தபோது ஆஃப்கானியப் பெண்கள் வேலைக்குச் செல்லவும் பள்ளிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆஃப்கானிஸ்தான் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வரும் வாரங்களில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது.