காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் தரையிறக்கும் கியர் பகுதியில் சடலம் ஒன்று சிக்குண்டதால் அது அவசரமாக அயல் நாடு ஒன்றில் தரையிறக்கப்பட்டது.
‘கியரை’ இயக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தினால் அது மூன்றாவது நாடு ஒன்றுக்கு திசை திருப்பப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது என்ற தகவலை “வோஷிங்டன் போஸ்ட்” உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் விமானத்தில் சடலம் சிக்குண்டமை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க இராணுவத்தின் மிகப் பெரிய சி17 ரக போக்கு வரத்து விமானமே அவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. அதே விமானத்தில் தொங்கிக் கொண்டு பயணித்தவர்கள் சிலர் விமானம் வானத்தில் கிளம்பிப் பறந்து கொண்டிருந்த சமயம் தரையில் வீழ்கின்ற காட்சிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
அவ்வாறு விமானத்தின் கீழ் பகுதியில் ஏறி ஒளிந்து கொண்டு பயணித்த ஒருவரது சிதைந்த உடல் பாகங்களே சக்கரங்களது ‘கியர்’ பகுதியில் காணப்பட்டுள்ளது.
தப்பியோட முயற்சிக்கின்ற ஆப்கானியர்களால் காபூல் விமான நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாகப் பெரும் குழப்பம் நிலவி வருவது தெரிந்ததே.