வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த மனைவியின் சகோதரியின் கணவரே கத்திக் குத்தை நடத்தியுள்ளார்.
நேற்று இரவு மதுபோதையில் அவர்களின் வீட்டிற்கு 23 வயதான அந்த நபர் வந்துள்ளார். அவருக்கு பிறிதொருவருடன் பிரச்சனை ஏற்பட்டிருந்தது. மைத்துனர் வீட்டுக்கு வந்து, பிரச்சனைப்பட்ட நபரை தூசண வார்த்தைகளால் சத்தமிட்டு பேசியுள்ளார்.
“பிரச்சனைப்பட்ட நபர் எங்கோ இருக்க, இங்கு வந்து ஏன் சத்தமிடுகிறாய், பிரச்சனைப்பட்டவரிடம் சென்று பேசு“ என மைத்துனர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நபர், எதுவும் பேசாமல் தன்னுடைய மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்று, மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து வந்து, மைத்துனர் எதிர்பாராத தருணத்தில் நெஞ்சில் குத்தியுள்ளார்.
அவரது இருதயத்தில் கத்தி பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில், இரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்தை நடத்திய 23 வயதான மைத்துனர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார்.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.