மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 180 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை (11) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
கொரோனா தடுப்பூசி 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மன்னாரில் 57 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியாக பைஸர் மற்றும் சினோபாம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சினோபாம் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி பெற்றுக்கொள்ள தவறியவர்கள் 023-2222916 என்ற தொலைபேசி இலக்கத்துடன் காலை 9 மணி முதல் மாலை 3 .30 மணி வரை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை மேலும் மன்னார் மாவட்டத்தில் 17 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் 7 பேர் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களோடு சேர்த்து இதுவரையில் மன்னாரில் 1221 பேரும் இந்த வருடம் 1204 பேரும் இந்த மதம் 180 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னாரில் மொத்தமாக 27 ஆயிரத்து 69 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டால் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடை முறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மடு மாதா உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான சுகாதார நடை முறைகளை கடைபிடித்தலுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .
இயன்றவரை வழிபாடுகளை முடித்துக் கொண்டு விரைவாக அவர்களுடைய இல்லங்களுக்கு திரும்புமாறு வேண்டப்படுகிறார்கள் .
பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி இன்று புதன் கிழமை (11)பேசாலை சென்.மேரிஸ் கல்லூரி , வங்காலை புனித ஆனாள் தேவாலயம், அச்சங்குளம் தேவாலயம் , முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யிலும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை (12) மன்னார் நகரத்தில் சித்திவிநாயகர் இந்து கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள்; கல்லூரி, நானாட்டான் டிலாசால் பாடசாலை , மடு தட்சணா மருதமடு பாடசாலை, மறிச்சுக்கட்டி அல்.யசிர் பாடசாலையிலும் இரண்டாம் கட்ட பைஸர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.