நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் இன்று புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,மடு திருத்தலத்தின் பரிபாலகர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதார துறையினர்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் அவ்வாறு தெரிவித்தார்.ஷ
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து தூய நற்கருணை பணியையும்,நடத்தி தூய நற்கருணை ஆசியையும் வழங்குவோம்.
ஆவணி மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மருதமடு அன்னையின் திரு விழாவாகிய விண்ணேற்பு திருவிழா திருப்பலி காலை 6.15 மணிக்கு ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி யும், திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்படும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
அரசாங்கத்தினதும்,சுகாதார திணைக்கள அதி காரிகளினதும் சுகாதார வழிகாட்டுதல்களின் படி நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலிகள் நான்கு ஒப்புக் கொடுக்கப்படும்.
காலை 6.15 மணிக்கு,அதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக் கும், காலை 11 மணிக்கு மூன்றாவது திருப்பலியும், இறுதியாக மதியம் 12.30 மணிக்கு நான்காவது திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.
குறித்த திருப்பலிகளில் மொத்தமாக 150 நபர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இக்கால கட்டத்தில் மாகாணங்களுக்கு இடையே உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓர் அளவு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மடு அன்னையின் திருவிழா அன்று மடு திருத்தலத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தர முடியாது.
மடு வீதி வரை வந்தாலும் மடு திருத்தலத்திற்கு செல்ல முடியாமல் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
ஏனைய நாட்களில் நீங்கள் ஆலயத்திற்கு காலையில் வந்து மாலையில் திரும்பிச் செல்ல முடியும். தங்கி நிற்க முடியாது. யாத்திரிகர்கள் பலர் பல தூர இடங்களில் இருந்து வருகை தர முயற்சிக்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தமது வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு வந்தால் தங்க இடம் இல்லை. திருவிழாவிற்கு ஆலயத்தினுல் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளமையினால் உங்களின் நீண்ட பயணத்தை நிறுத்தி உங்கள் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி,இணையத்தளங்கள் ஊடாக திருவிழாவை பார்க்க முடியும்.
வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்