மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக தாம் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவைப்பாடு கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
.
இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.
அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரூபன் இதனை தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் தொழிற்சங்க சக்தியாகவும் அவர்களின் பாதுகாவலனாகவும் இ.தொ.கா இருக்கும் போது புதிய தொழிற்சங்கனம் ஒன்றுக்கான தேவையில்லை.
ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் பலம் பொருந்திய தொழிற்சங்கம் மலையகத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மலையக மக்கள் எந்தவித புதிய தொழிற்சங்களுக்கும் இடம்கொடுக்க மாட்டார்கள் எனவும் இவ்வாறான நிலையில் புதிய கூட்டணியை அமைப்பதோ அல்லது தொழிற்சங்கத்தை உருவாக்குவதென்பதோ சாத்தியமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
இழுபறியில் இருந்த 1000 சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த இ.தொ.கா தொடர்ந்தும் மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டுள்ளது .
எனவே மலையக மக்களை ஏமாற்றி அவர்களை வஞ்சிக்கும் எந்த தொழிற்சங்கங்களுக்கும் இனி மேல் பெருந்தோட்ட மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே புதிய தொழிற்சங்கங்கத்தை உருவாக்கி தொழிலாளர்களை சேர்த்து விடலாம் என மனோ கணேசன் உள்ளிட்ட உறுப்பினர்களின் நினைப்பது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிற்சங்கம் என கூறி வேகாத பருப்பை மலையகத்தில் வேக வைக்க முற்படுவது கேலியான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.