நுளம்பு குடம்பிகள் வளரும் நீர் நிலைகளை துல்லியமாக அடையாளம் காண்பதற்கு நாய்களை பயன்படுத்தி இலங்கை பொலிசார் மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றியளித்துள்ளது.
கண்டி பொலிஸ் நாய்கள் பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு நாய்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவினால் நடத்தப்படும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்த நாய்கள் உதவும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
குற்றவியல் விசாரணைகள், சந்தேக நபர்களை அடையாளம் காண்பது, வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளுக்காக நீண்ட காலத்திற்கு கே 9 எனப்படும் இந்த பிரிவின் உதவி பயன்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
நுளம்புகளால் பரவும் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களை பரப்பும் பராமரிக்கப்படாத இடங்களை அடையாளம் காண கவனம் செலுத்தப்பட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.
இந்த பணியில் கே 9 ஜொனி மற்றும் கே 9 ரோமா பயிற்சி பெற்றதாக அவர் கூறினார்.
மேலும் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.