ஓமன் அருகே எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என நேட்டோ அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம்சாட்டியுள்ளன.
லண்டனில் செயல்பட்டு வரும் இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதலில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பிரிட்டனைச் சோ்ந்தவர். மற்றொருவர் ருமோனியா நாட்டவர் ஆவார்.
இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்தநிலையில் ஓமன் அருகே எண்ணெய் கப்பல் தாக்குதல் விவகாரத்தில் ஈரான் மீது நேட்டோ அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம்சாட்டியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ரலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஈரான் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. கப்பல் போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பு இருப்பது அவசியமானது. இந்த விஷயத்தை ஐரோப்பிய யூனியன் கடுமையாக பார்க்கிறது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
.இதுபோலவே நேட்டோ அமைப்பும் ஈரானை குற்றம்சாட்டியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. கடல்வழி போக்குவரத்து சுதந்திரத்தை நேட்டோ எப்போதும் வலியுறுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் மத்திய ஆசியாவில் அமைதியை ஈரான் சீர்குலைக்கும் செயலில் இறங்கியுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.