மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை(3) காலை 66 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் இந்த வார இறுதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகும்.
ஏற்கனவே 30 வயதிற்கு மேற்பட்ட 52 ஆயிரத்து 628 பேர் தமது முதலாவது தடுப்பூசியையும்,500 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளின் போது 120 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 61 பேர் மன்னார் தாழ்வுபாட்டு பகுதியை சேர்ந்த மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 பேர் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்தவர் களாகவும் 4 பேர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் களாகவும் காணப்படுகின்றனர்.
தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத 30 பேர் குறித்த தொற்றாளர்களுடன் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் 30 வயதிற்கு கீழ் பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.இவர்களுடன் சேர்த்து இது வரை மொத்தமாக 1107 பேர் கொரோனா தொற்றுடன் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் மொதடதமாக 1090 பேரும்,புத்தாண்டு கொத்தணியில் 755 பேர், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களில் 66 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை(3) அதிகாலை கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.களுத்துறையில் இருந்து மன்னாரிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாதம் 440 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டமையினால் சுகாதார வழி முறைகளை பின் பற்றுவதில் சிறிது தளர்வு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனவே மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் தமது சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.