முகக்கவசம் அணியுமாறு கூறியதையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகருக்கும், முதியவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முதியவர் மண்வெட்டி பிடியினால் பொதுச்சுகாதார பரிசோதகரின் உச்சந்தலையில் ஒரு போடு போட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று முன்தினம் (31) இந்த சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடத்திய 80 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காயமடைந்த 62 வயதான பொதுச்சுாதார பரிசோதகர் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையக பகுதியை சேர்ந்த ஒருவர் பல தசாப்தங்களின் முன் மதுபான கடையில் பணியாற்ற மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இப்பொழுது எந்த உறவுமில்லாமல் பொது நிலமொன்றில் சிறிய கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.
தற்போது சுமார் 80 வயது மதிக்கத்தக்க அவர், பிரதேசத்தில் உள்ளவர்கள் தயாரிக்கும் சிற்றுண்டியை அவர் மூலம் விற்பனை செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம், பொதுச்சுகாதார பரிசோதகரால் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 80 வயது முதியவருக்கும், 62 வயது பொதுச்சுகாதார பரிசோதகருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண்வெட்டி பிடியினால், பொதுச்சுகாதார பரிசோதகரின் தலையில் தாக்கியுள்ளார்.
வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரிற்கு 8 தையலிடப்பட்டது.
கைதான முதியவர் நேற்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.