நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றிய பதினொரு பெண்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் தீக்காயங்களுடன் 16 வயது சிறுமி இறந்ததை தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை தொடங்கினர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, 16 வயது சிறுமி உட்பட 11 பெண்கள் 2010 மற்றும் 2021 க்கு இடையில் பதியுதீனின் இல்லத்தில் பணிப்பெண்களாக வேலை செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர், அங்கு பணிபுரிந்த பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய சிறப்பு புலனாய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டன.
16 வயது சிறுமியை எம்.பி.யின் வீட்டுக்கு அழைத்து வந்த அதே தரகர், மற்ற சிறுமிகள், யுவதிகளையும் அங்கு அழைத்து வந்திருந்தார்.
16 வயது சிறுமி கிஷாலினியை தவிர, முன்னர் அங்கு பணிபுரிந்த மற்றொரு பெண் உடல்நலக்குறைவு (புற்றுநோய்) காரணமாக இறந்துவிட்டதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் மற்றொரு பெண் எம்.பி.யின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்றுவரை எட்டு பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர்களில் 29 வயதான பெண் ஒருவர், எம்.பி. பதியுதீனின் வீட்டில் பணிபுரியும் போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொலிசாரிடம் கூறினார்.
அந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பதியுதீனின் மனைவி, மாமனார், தரகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக பணியாற்றிய 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுகைதான ரிஷாத்தின் 44 வயதான மைத்துனரும் சிறையில் அடைக்கப்பட்டார்.