தொழிநுட்பத்திற்க்காவும், முதலீட்டுக்காகவும் வளங்களையும், நிலங்களையும் அந்நியர்களுக்கு தாரை வார்க்கலாமா என – பூநகரி கடற்றொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிக்குடாவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச மீனவர் சங்கங்களுடனான கலந்துரையாடல் ஒன்று (01)நேற்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பூநகரி பிரதச செயலகத்திற்குட்பட்ட கௌதாரி முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல்அட்டை பண்ணை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கையை பொறுத்த வரையில் எமது ஆட்சியாளர்கள் எங்களுடைய வளங்களை பல நாடுகளுக்கு விற்கின்ற அதே வேளை பல நாடுகள் எமது வளங்களை சூரையாடுவதற்கு வழி வகுத்துள்ளனர். அதே வேளையில் சீனாவின் அதிகரித்த ஆதிக்கம் வடக்கில் காணப்படுகின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப்பிரதேச கௌதாரி முனையில் மீனவ சங்கங்களே அறியாமல் அவர்களது அனுமதியும் இல்லாமல் சீன பிரஜைகள் இரண்டு ஏக்கருக்கு உட்பட்ட காணிகளுக்குள்ளே அட்டைக் குஞ்சுகளை வளர்ப்பதற்கான பண்ணைகளை
உருவாக்கியிருப்பது யாருடைய அனுமதி பெற்று இதை இவர்கள்
செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகமான கேள்வியை உருவாக்கியுள்ளது.
கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கருத்து தெரிவித்தபோது கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை எங்களுக்கு தொழில்நுட்பத்தையும் முதலீடையும் தருவதாக இருக்கிறது. ஆகவே அவர்கள் சீன பிரஜைகளா அல்லது வேறு
நாட்டு பிரஜைகளா என்பதல்ல எங்களுக்கு முக்கியம் முதலீடும் தொழில்நுட்பமும் எங்களுக்கு முக்கியம் என்று கூறியிருந்தார். அவ்வாறானால் தொழில்நுட்பத்திட்கும், முதலீட்டுக்காகவும் எங்களுடைய நிலத்தை மற்றவருக்கு தாரைவார்த்து அல்லது விற்பது சரியான விடயமா என்று நாங்கள் பார்க்க வேண்டும். அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களுடைய வளங்களை மற்றவர்களுக்கு கொடுக்கின்ற முயற்சிகளில் முயல்கின்றதா என்ற கேள்வி எங்களுக்குள்ளே இருப்பதாகவும்தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் வீ.சுப்பிரமணியம், தேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்க வட கிழக்கின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், பூநகரி கடற்றொழிலாளர் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ் மற்றும் மீனவ சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.