அரசாங்கம் தற்போது பயணிப்பதைப் போன்று தொடர்ந்து பயணிக்குமானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும் ஏற்படுமென தெரிவித்த தேசிய பாரம்பரியம் மற்றும் கிராமிய கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மக்கள் எப்போதும் பொறுமையுடன் இருக்கமாட்டார்கள். நேரம் வரும் போது மக்கள் தீர்மானங்களை எடுப்பர் என்றார்.
எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் “ஒரே நாடு -ஒரே சட்டம்” என்பதுக்காகவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என தெரிவித்த அவர், ஆனால், இப்போது நாம் சிறிய சந்தேகத்தை உணர்கின்றோம். பிணைமுறி விவகார கொள்ளையர்களைப் பிடித்தார்களா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைப்
பிடித்தார்களா? என வினவினார்.
போகம்பறை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று முன்தினம் (31) மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து திரும்பியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“சேதனைப் பசளை என்பது சிறந்த எண்ணக்கரு தான். ஆனால் துரதிஷ்வசமாக ஒரே நேரத்தில் அதனை செய்ய முடியாது. அதற்கென கால எல்லை அவசியம்.மண் மற்றும் கன்றுகள் உயிருள்ளவை. அதனால் தான் அதற்காக விசேட கவனம் செலுத்தப்படுகின்றது” என்றார்.
இலங்கையின் மண்ணும் கன்றுகளும் 40 வருடமாக இரசாயன உரத்துக்கு பழகிவிட்டன எனத் தெரிவித்த அவர், எனவே, அது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை ஒரு இரவில் செய்து விடமுடியாது. அதை செய்வதற்கு முறையொன்று உள்ளது என்றார்.