இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த 8 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை தாக்கல் செய்த சந்தர்ப்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் மூவர் உரிய ஆவணங்களை முன்வைக்காத காரணத்தினால் குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான விடயம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜராக அதன் உதவி பணிப்பாளர் அசித அன்டனி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வழக்கை தொடர்ந்து நடத்தி செல்வது கடினமாயின் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு சரண குணவர்தன சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி, இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளில் இருந்து பிரதிவாதியான சரண குணவர்தனவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
2006 மற்றும் 2007 க்கு இடையில் அவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட மோசடி சம்பவங்களிற்காக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் ரூ. 8.5 மில்லியன் பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்த விவகாரத்தில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வாகனத்தை லொத்தர் சபைக்கு அவர் மீள கையளிக்கவில்லையென்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.