ஊடகவியலாளர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களில் தங்களுக்குரிய ஆவணங்களை வழங்கி எந்தவொரு நாட்களிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் .
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (23) மாலை நடாத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது-
சினோபாம் மிகச்சிறந்த ஒரு தடுப்பூசி. இலங்கையில் 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது. பக்கவிளைவு மற்றும் வினைத்திறன் குறைவு எதையும் ஏற்படுத்தாது மிகச்சிறப்பாக தொழிற்படும் தடுப்பூசியாக இலங்கையில் அறியப்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆய்வின் ஊடாக வெளிவந்த தகவல்களை அழுத்தமாக குறிப்பிடுகின்றன.
எனவே தான் கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தடுப்பூசி ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.வீட்டில் இருந்து தடுப்பூசி ஏற்றுகின்ற மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தின் அடிப்படையில் இரண்டாவது கட்டத்தில் நடமாடும் சேவையூடாக ஏற்றுவதற்கு தயாராகவுள்ளோம். இச்செயற்பாடு கொழும்பு போன்ற நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கல்முனை பிராந்தியத்திலும் இத்திட்டத்தை 100 வீதமாக செயற்படுத்துவோம்.
விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வழங்கி கொண்டிருக்கின்றோம்.சிலர் மூடநம்பிக்கைகளை நம்பி தடுப்பூசிகளை ஏற்றுவதில் பின்னடிக்கின்றனர். எமது கல்முனை பிராந்தியத்தில் கூட 10 வீதமானவர்களும் இத்தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதை விட தனிமைப்படுத்தல் சட்டமானது நீடிக்கின்ற சந்தர்ப்பங்கள் கொரோனா எமது நாட்டில் எப்போது கட்டுப்பாட்டிற்குள் வருகின்றதோ அல்லது மக்களின் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கும் பட்சத்தில் அதனூடாக கொரோனா பரவல் குறைவடைந்து செல்லுமேயானால் தனிமைப்படுத்தல் சட்டத்தை நீடிப்பதை மறுபரிசீலனை செய்யப்படலாம்.
எனவே மக்கள் அனைவரும் குறித்த நோயினை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.ஊடகவியலாளர்கள் கொரோனாவுடன் மிக நெருங்கியவர்களாக காணப்படுகின்றார்கள்.எமது கொரோனா சம்பந்தமாக பல விடயங்களை பொதுமக்களிடம் கடந்த ஒன்றரை வருடங்களாக கொண்டு சேர்த்தவர்கள் ஊடகவியலாளர்கள்.அவர்கள் தங்களது உயிர்களை துச்சமாக மதித்து கொரோனா சம்பந்தமாக தகவல்களை சேகரித்த வண்ணம் இருக்கின்றார்கள்.அவர்களுக்குரிய தடுப்பூசிகள் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.
எனவே ஊடகவியலாளர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களில் தங்களுக்குரிய ஆவணங்களை வழங்கி எந்தவொரு நாட்களிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.கல்முனை பிராந்தியத்தை பொறுத்தவரையில் 3600 கொவிட் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.64 மரணங்கள் கூட இங்கு பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தினுள் கல்முனை பிராந்தியத்தினுள் இரு மரணங்கள் கொவிட் தொற்றால் சம்பவித்துள்ளமை வேதனையான விடயமாகும்.
தற்போது எமது பிராந்தியத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கபப்ட்டுள்ளமை மகிழ்ச்சியான விடயமாக உள்ளது.இவ்வாறு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை எமது ஆளுகைக்குட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு பிரித்து அனுப்பியுள்ளோம்.நாளை காலை 8 மணியளவில் பொதுமக்களுக்கு இத்தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.இந்த சினோபாம் தடுப்பூசியினால் இப்பிராந்தியத்தில் ஏற்படும் தொற்றுக்களை கட்டப்படுத்தவும் இறப்புக்களை குறைக்கவும் உதவும் என்பது எமது நம்பிக்கையாகும் என குறிப்பிட்டார்.
-பா.டிலான்-