கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் ஆரம்பக்கட்டப்பணிகள் சனிக்கிழமை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்க இருக்கிறது என சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசர தேவையுடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதுடன் அதே நாளில் நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயத்திலும், கல்முனை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையிலும், மருதமுனை அல்- மதீனா வித்தியாலயத்திலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என மக்களுடன் நேரடியாக பழக்கம் கொண்டிருக்கும் முன்னிலை உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திங்கட்கிழமை முதல் முப்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு மேற்குறிப்பிட்ட பாடசாலைகளில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.