யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிற்கு 50 வீத மானியத்தை அமைச்சர் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என முன்னாள் வடக்கு மாகாண மகளிர், சிறுவர் விவகார அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக கட்சியின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இன்று எமது இளைஞர் யுவதிகள் இளம் தொழில் முயற்சியாளர்களாக வருவதற்கு காத்திருக்கின்ற இந்த நேரத்தில் இவர்களிற்கான ஊக்குவிப்புகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் பூநகரி கடலட்டை வளர்ப்பிற்கு அவர்களிற்கு 50 வீத மானியத்தை வழங்குவார்களாக இருந்தால் அவர்கள் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான ஏது நிலையாக இருக்கும்.
ஆனால் இன்று வேறொரு நாட்டிலிருந்து அனுமதியில்லாமல் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவதை நாங்கள் பார்க்கின்றோம். அதேவேளை அந்த இடத்தில் அனுமதியில்லாமல் எம்மவர்கள் ஏதும் சிறிய முயற்சியில் ஈடுபட்டால் பொலிசார் அல்லது கடல் வாழ் நீரியல் திணைக்கள அதிகாரிகளைக்கொண்டு அதனை இடை நிறுத்துகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. இன்று அன்னிய தேசத்திலிருந்து வந்து பண்ணையை ஆரம்பிக்கின்ற நிலை இருக்கின்றது.
வேலை இல்லாத பிரச்சினையால்தான் இளைஞர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள். நீரியல் வளங்கள் தொடர்பான பல புத்திஜீவிகள், கல்வியலாளர்கள் எம்மத்தில் இருக்கின்றார்கள். அவர்களைவிட இரால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு உள்ளிட்டவற்றில் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்ற நிலையில், எமது இளைஞர்களிற்கு அவற்றுக்கான அனுமதியை கொடுப்பது மாத்திரமல்லாது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிற்கு 50 வீத மானியத்தை அமைச்சர் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்று தமிழர்கள் சரியான முதலீடுகளை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஏனென்றால், அனுமதி பெற்றுக்கொள்வது கடினமாக இருக்கின்றது. அவ்வாறான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு சிங்கள பிரஜை ஒருவரினது பெயரையும் இணைத்துள்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
எங்களுடைய மக்களுக்கு முன்னுரிமையை வழங்குங்கள் என்று கேட்கின்றோம். இப்போது தெங்கு பயிர்ச்செய்கைக்கும் வேறு வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களிற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் நாங்கள் பார்கின்றோம். இதேநேரம், எமது இளைஞர்கள் தெங்கு செய்கைக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த நிலையில் சில கிராம சேவையாளர்களு அதனை நிராகரித்துள்ளதாகவும் பேசப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் யாருக்கு காணி வழங்கப்பட்டது, எங்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்துவது அரசாங்க அதிபர் மற்றும் உத்தியோகத்தர்களின் கடமையாக இருக்கின்றது.
கௌதாரிமுனை கடலட்டை பண்ணைகூட சர்வதேசத்தின் அழுத்தத்தில் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட்டமைப்புகூட அனுமதி அளித்திருந்த நிலையில்தான் குறித்த அட்டை பண்ணைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அமைந்தது. இப்பொழுதுதா்ன புதிதாக கண்டதை போல் அதனை எதிர்க்கின்றதை பார்க்கின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.