சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச். எம். அஸாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அதிதீவிர சிகிச்சைக்கான வைத்திய உபகரணங்களை வைத்திய அத்தியட்சகரிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன கையளித்ததுடன் கொரோனா சிகிச்சைக்கான தனியான அதி தீவிர பிரிவையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் லால் பனாப்பிட்டிய, வைத்திய சேவை பணிப்பாளர் அயந்தி கருணா நாயக்க, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தவூபீக் மருந்து விநியோக மற்றும் இரசாயன ஆய்வுக்கூட பணிப்பாளர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.