கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வவுனியா ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் கோவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் அனேகமான மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளில் கணிசமானவை வழங்கப்பட்டு விட்டன. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களும், 205 அதிபர்களும், 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ள நிலையில் அவர்களுக்கான தடுப்பூசிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், கோவிட் தடுப்பூசி வழங்கலில் வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.