வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நேற்று (20) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 9 வது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இழுபறியின் பின்னர், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரமத செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. வெற்றிடனான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர்.
எனினும், சிங்கள பிரதம செயலாளரை நியமிக்கும் வாய்ப்பை அரசுக்கு, வடக்கிலுள்ள அரச தரப்பு தமிழ் அரசியல்வாதிகளே உறுதி செய்ததாக குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ் மாட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தொடர் நச்சரிப்பையடுத்து, சிங்கள பிரதம செயலாளர் நியமனத்தை அரசு கச்சிதமாக நிறைவேற்றியுள்ளது.
வடக்கு முன்னாள் விவசாய அமைச்சின் செயலாளர் பட்டியலில் முன்னணியில் இருந்த போது, வடக்கு ஆளுனர் தரப்பு அவரை விரும்பவில்லையென்றும், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை டக்ளஸ் தரப்பு பிரேரித்த போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதாகவும், மலையக பின்னணியுடைய ஒரு பெண் அதிகாரியை அங்கஜன் தரப்பு பிரேரிக்க, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.