சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இலுப்பக்கடவையில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குத்திகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிசாரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக இன்று அதிகாலை சங்குபிட்டி பாலத்தருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த ரிப்பர் வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
குறித்த ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் சூட்சுமமாக மறைத்து மரக்குத்திகள் எடுத்து செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சாரதியும் கைது செய்யப்பட்டார். சாரதியையும், டிப்பரையும் பூநகரி பொலிசார் பொறுப்பேற்றனர்.
குறித்த மரக்குத்திகள் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும், 24 மரக்குற்றிகளும் 8 இலட்சம் ரூபாவிற்கு அதிக பெறுமதி கொண்டது எனவும் பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் பொலிசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.